Sunday, March 26, 2017

"அன்னை நாமாவளி அட்டகம்"



"அன்னை நாமாவளி அட்டகம்"

கயற்கண்ணால் படைக்கும் மீனாக்ஷி,
தவ வலிமை சேர்க்கும் காமாக்ஷி
மூவுலகாளும் விசாலாக்ஷி, முக் கண்ணி அவளே நம் மன சாக்ஷி

பவ வினை களையும் பவானி, யம
பயமதை விரட்டும் பைரவி,
சிவனருள் கொழிக்கும் சிவகாமி,
சுபமழை பொழியும் அபிராமி

தாமதியாள் அவள் கோமதி,  நல்
ஞானமளிப்பாள் காந்திமதி
மன நலமளிக்கும் மனோண்மணி
உயிர் நலம் பேணும் மருந்தீஸ்வரி

வேழனை ஈன்ற விக்னேஸ்வரி, வடி
வேலனை அணைத்த கௌமாரி
சபரீசனை அளித்த (ஜெகன்) மோஹினி
சகலத்தையும் படைக்கும் குமரியாம் கன்னி

அழகுப் பெட்டகம் வடிவாம்பாள்
அருள் பொக்கிஷம் கற்பகாம்பாள்
அரணாய் காக்கும் காளிகாம்பாள்
அகிலாண்டேஸ்வரி த்ரிபுராம்பாள்

உலகுயிரை இயக்கும் இசக்கியம்மன்
பேச வைக்கும் பேச்சியம்மன்
வான் மழை பொழி மாரியம்மன்
வம்சம் பாலிக்கும் கரு மாரியம்மன்

அலையா மனமருள் அலைமகள்
நிலையான ஞானமருள் கலைமகள்
வீர விவேகமருள் மலை மகள்
திரிசூலியாம்   தலை மகள்

கண்ணனை மறைத்த துர்கா தேவி,
முக் கண்ணனைக் காத்த உமா தேவி,
வேதனும் தொழும் வேத மாதா**
வேண்டுமுன் னருளும் ஸ்ரீ லலிதா

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

** காயத்ரி


No comments:

Post a Comment