குன்றம் எறிந்ததுவும் குன்றப் போர் செய்ததுவும்
அன்றங்கு அமரர் இடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக்
கைவிடா நின்றதுவும் கல் பொதும்பில் காத்ததுவும்
மெய் விடா வீரன் கை வேல்
வீர வேல் தாரை வேல் விண்ணோர் சிறை மீட்ட
தீர வேல் செவ்வேள் திருக் கைவேல் - வாரி
குளித்த வேல் கொற்ற வேல் சூர் மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரை யான் பின் செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடிய வினை தீர்த்தருளும்
வேலப்பா செந்தி வாழ்வே
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்
முருகனே செந்தி முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒருகை முகன்
தம்பியே நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்
நம்பியே கைத் தொழுவேன் நான்
பரங்குன்றின் பன்னிரு கைக் கோமான் தன பாதம்
கரம் கூப்பிக் கண் குளிரக் கண்டு - சுருங்காமல்
ஆசையாய் நெஞ்சே அணி முருகாற்றுப் படையைப்
பூசையாக் கொண்டே புகல்
நக்கீரர் தாம் உரைத்த நன் முருகாற்றுப் படையைத்
தற்கோல நாள் தோறும் சாற்றினால் - முற்கோல
மா முருகன் வந்து மனக் கவலை தீர்த்தருளித்
தான் நினைத்த தெல்லாம் தரும்
No comments:
Post a Comment