Monday, November 27, 2017

MS Amma 108 Potri


இசை தேவதைக்கு நூற்றெட்டு போற்றி

மதுரையில் தோன்றினாய் போற்றி
கயற்கண்ணி அளித்த கலைவாணியே போற்றி
ஷண்முக வடிவமே  போற்றி
பரணியில் உதித்தாய் போற்றி 
தரணி ஆண்ட இசையே போற்றி  5

கானக்  குயிலே போற்றி
வீணையின் நாதமே  போற்றி
ஸுஸ்வர லயமே போற்றி
சிவத்துள் இணைந்தாய் போற்றி
சிவ சுபம்  ஆனாய்  போற்றி  10

பரமகுரு பதம் பணிந்தாய் போற்றி
பக்தி மகரந்தம் ஆனாய்   போற்றி
முசிரி அய்யன் முத்தே போற்றி
செம்மங்குடி பாணியே  போற்றி
அரியக்குடி அன்பு கொண்டாய் போற்றி 15

பாவ ராக தாள விநோதினியே போற்றி
அமரும் பொலிவே போற்றி
இசைக்கும் பாங்கே போற்றி
காண மங்கலமே போற்றி 
கருத்தினில் நிலைத்த இசையே போற்றி 20

கேட்கத் திகட்டா அமுதே போற்றி
இன்னும் கேட்கத் தூண்டும் இன்பே போற்றி 
ஸத்குரு வழி உபாசனையே  போற்றி
குருகுஹ மந்த்ர செம்மையே போற்றி
ஸ்யாம க்ருஷ்ண அமுதமே போற்றி  25
 "பாவயாமியின்" பாவமேபோற்றி.
 சுப்ரபாத சுநாதமே போற்றி
ஸஹஸ்ரநாம சங்கீர்த்தனமே போற்றி
அன்னமய்யாவின் அகம் கவர்நதாய்   போற்றி
பஞ்ச ரத்ன மாலை சூட்டினாய் போற்றி  30

படியளப்போனுக்கே பாடி/படி அளந்தாய் போற்றி
இறையை எழுப்பும்/துயிலச் செய்யம்  கனிவே போற்றி
ஷண்மத சங்கீதமே  போற்றி 
தமிழிசை முதல்வியே  போற்றி 
அனைத்து இசை மேதையே போற்றி  35

தன்னை மறந்தாய் போற்றி
இறையைக் கண்டாய் போற்றி
இறையைக் காட்டுவித்தாய் போற்றி
இறையுள் கலந்தாய் போற்றி
இறை இசை தேவதையே போற்றி  40

அல்லா ஏசு புகழ் இசைத்தாய்  போற்றி
அருள் நானக்கையும் வணங்கினாய் போற்றி
பண்டிதரைக் கவர்ந்தாய் போற்றி
பாமரரை ஈர்த்தாய் போற்றி 
பக்தி வழி சமைத்தாய் போற்றி  45

நாத்திகரையும் கவர்ந்தாய் போற்றி
நல் வழி சமைத்தாய் போற்றி
மதங்களை கடந்தாய் போற்றி
வேற்றுமை களைந்தாய் போற்றி
மனங்களை இணைத்தாய் போற்றி  50

பன்மொழிப் புலமையே போற்றி
பரிந்து உள்ளுணர்ந்த இசையே போற்றி
பத உச்சரிப்பில் செம்மையே போற்றி
புரந்தர வசந்தியின் ஸோதரியே போற்றி
பகட்டில்லா பட்டம்மையின் தோழியே போற்றி   55

சக கலைஞர்களுக்கு   ஊக்கமே போற்றி
எவரிடமும் கற்கும் ஏற்றமே போற்றி
எவருக்கும் கற்பிக்கும் கனிவே போற்றி
குறை காணா நிறையே போற்றி
நலிந்தோர்க்கு உதவும் பண்பே   போற்றி   60

இசையை இறைக் கற்பணித்தாய் போற்றி
விளைந்த பயனை நாட்டிற்களித்தாய் போற்றி 
மஹாத்மா மனம் கவர்ந்தாய் போற்றி
தேசபக்திக் கீதமே  போற்றி
தெய்வ பக்திச் சுடரே போற்றி  65

மீராவின் மறு வடிவே  போற்றி
காமகோடிக் கனியே போற்றி
சத்ய சாயி மனம் கவர்ந்தாய் போற்றி
நிலைத்த பேரருள் கொண்டாய் போற்றி
இங்கித பண்பின் இமயமே  போற்றி  70

கண்டத்தால் கண்டங்களை இணைத்தாய் போற்றி
உலக அரங்கில் ஒளிர்ந்தாய் போற்றி
சதா சிவ பதிவ்ரதையே போற்றி
இல்லறத் துறவியே போற்றி
நல்லற நாயகியே போற்றி
  75

பட்டங்களுக்கு பெருமை சேர்த்தாய் போற்றி
சிவன் சார் மெச்சிய எளிமையே போற்றி
ஈவதற்கென்றே தோன்றினாய்  போற்றி
ஈவதற்கென்றே இசைத்தாய்  போற்றி
இன்றும் ஈந்து இசை பட வாழ்கிறாய் போற்றி  80

கள்ளமில்லா உள்ளமே போற்றி
காற்றினில் வரும் கீதமே போற்றி
காலத்தை வென்ற இசையே போற்றி
இல்லம் தோறும் ஒலிக்கும் மங்கலமே  போற்றி
நல் உள்ளங்களில் நிலைத்த உருவே போற்றி   85

குறை ஒன்றுமில்லாய் போற்றி
ஓம்கார நாதமே போற்றி
ஔதார்ய குணமே போற்றி
பாரத ரத்னமே போற்றி
பார்புகழ் பாரதப் பெருமையே  போற்றி 90

பெண்மையின் இலக்கணமே போற்றி
இன்முக மந்தஹாஸமே போற்றி
சுப சௌபாக்யமே போற்றி
பண்பின் சிகரமே போற்றி
எளிமையின் எழிலே போற்றி  95

பிரதோஷ மாமாவின் துணை கொண்டாய் போற்றி
பெரியவருக்கு மணி மண்டபம் சமைத்தாய் போற்றி
உருவாய் எம்முடன் வாழ்ந்தாய் போற்றி
அருவாய் எம்முள் நிறைந்தாய் போற்றி
மரணத்தை வென்ற மாண்பே போற்றி  100

மண்ணோர் செய்த மாதவமே போற்றி
விண்ணோர் செய்த பாக்கியமே போற்றி
எம் எஸ் அம்மா போற்றி
எம் இசை அம்மா போற்றி
சிவமருளிய சுபமே போற்றி
சுபம் பொழி சிவமே போற்றி
சுபமே சிவமே போற்றி
சிவமே போற்றி சுபமே போற்றி  108

சிவம் சுபம்

No comments:

Post a Comment