Sunday, June 30, 2019

Mahaperiyavaa Bhajan - Mohanam (உம்மாச்சி தாத்தா வாங்க)



உம்மாச்சி தாத்தா வாங்க - உங்க
அருளாசியை அள்ளித் தாங்க
கண்ணாமூச்சி ஆடாமல் எங்க
கவலையைத் தீர்க்கும் தெய்வம் நீங்க

அனுஷத்துதித்த ஆதிரையர் நீங்க
ஆதிசிவனாம் எங்கள் இறைவன்
அன்னை காமாக்ஷி போலே
தவக்கோல காமகோடி  ஈசன்

இருவர் காணா பதத்தை
எமக்குக் காட்டிய இறைவன் நீங்களே
இன்றும் என்றும் எம்மிடை
நடமாடும் தெய்வம் நீங்களே ஸ்வாமி

அன்று மௌனமாய் வேதம் உறைத்த
ஆலடியரசரும் நீங்களே
இன்று எமக்காய் திருவாய்
மலர்ந்த தெய்வக் குரலும் தங்களதே

ஒருபிடி அரிசி திட்டம் அதனால்
ஏழை எளியோர்  பசி போக்கி
அன்ன பூரணித் தாயாய் எங்கள்
இதயங்களில்  அமர்ந்தீரே

அநாதை என்று எவரையும்
தள்ளிடா அம்மை யப்பன் ஆவீரே
அனைவரும் முக்தி அடைய வழியை
காட்டிய குரு நாதரே

அரி அர பேதம் களைந்த
த்வைதாத்வைத சேது ராமரே
ஆண்டாள் சம்பந்தர் பதிகங்களை
பரிந்துரைத்த பவித்ரரே

அன்னிய மதத்தினரும் மதிக்கும்
அற்புத துறவற வேந்தரே
அஞ்ஞான இருள் அகற்றிடும்
மெய் ஞான விஞ்ஞான வித்தகரே

ப்ரதோஷ தொண்டர் வலம் வந்த
ப்ரணதார்த்தி ஹர சிவ ஸ்வாமி, (இன்)
இசை கான ஸரஸ்வதி போற்றிய
மணி மண்டப நாதரே

திருமேனி யெங்கும் திருநீறு
திருவாய் மலரும் "நாராயணா"
திருக்கரம் பொழியும் வற்றா கனகம், உம்
திருவடியே கைலாயம்

உலகெங்கும் ஒளிரும் ஜோதி
அன்பர் மனத்தே நிலவும் நிம்மதி
எம்மைக் காக்கும் தயா நிதி
உம்மை அடைந்தோம் சரணாகதி

ஜெய ஜெய ஜெய ஜெய சங்கர தேவா
ஜெய  ஜெய சந்திர சேகர தேவா
ஜெய ஜெய ஜெய ஜெய சங்கர தேவா
ஜெய  ஜெய சந்திர சேகர தேவா

சிவம் சுபம்

No comments:

Post a Comment