உ
நேற்று இரவு அன்னை மற்றும் சுந்தரேசப் பெருமானின் அர்த்த ஜாம, மற்றும் பள்ளியறை பூஜை/ஊஞ்சல் வைபவங்களை (மீண்டும் ஒரு முறை) கண்டு களிக்கும் வாய்ப்பு பெற்றேன்.
அன்னையின் அர்த்த ஜாம அபிஷேகத்திற்குப் பின் அன்னை வெண் (சில நேரங்களில் pale yellow) பட்டுப் படவையில் காட்சி தருகிறார்.
மூலத்தானத்தில் அன்னையை பாதாதி கேசம் மல்லிகைகப் பூவால் மட்டுமே அலங்கரிக்கப்பட்டு ஒரு மஹா தீபாராதனை செய்கிறார்கள். இந்த நேரத்தில் அன்னையின் தோத்திரங்களை, பாடல்களை நாம் அனைவருடன் இணைந்து இசைக்கலாம்.
தீபாராதனையுடன் அன்னையின் மூலத்தானம் மூடப்பட்டு, பள்ளியறை திறக்கப்பட்டு அங்கு மல்லிகை சூடி அமர்ந்த அன்னையைத் தெரிசிக்கலாம்.
அதே நேரத்தில்,
இறைவனும் தனது அ-ஜாம பூஜைக்குப்பின் அன்னையிடத்திறகு மேள தாளத்தோடு வருகிறார். அன்னை சன்னிதி தலைவாயிலில், அய்யனின் புனிதத் திருவடியானது பூஜை செய்விக்கப் பட்டு, முழுதும் மல்லிகை சூழப்பட்டு ஒரு சீலரால் தாங்கப் பட்டு பள்ளியறைக்குள் செல்கிறது. தொடரந்து அய்யனை "ராஜாதி ராஜ ராஜ கம்பீர ராஜ குல ரக்ஷக ......... சௌந்திர பாண்டிய சொக்கநாத சுந்தரேசப் பெருமான் வருகிறார்" என்று கட்டியம் கூறி மிகுந்த பணிவுடன், குங்குலிய சேவையுடன், அய்யனை பள்ளியறை ஊஞ்சலில் எழுந்தருளச் செய்கிறார்கள்.
கூடியிருக்கும் அனைவரும் மாணிக்க வாசகப் பெருமானின் "திருப் பொன்னூஞ்சல்" ஒரே குரலில் இசைக்கிறார்கள். பின் விரிவான தீபாரதனை வைபவம். அம்மையப்பன் ஊஞ்சலாடுவதை எதிரில் இருக்கும் நிலை கண்ணாடியில் அவர்களே பார்த்து மகிழ்கிறார்கள். அதை நாமும் கண்டு நெகிழலாம். பின் நாதசுர இன்னிசையுடன் பால் கல்கண்டு மற்ற ப்ரசாதங்கள் நைவேத்யம் செய்விக்கப் பட்டு அம்மையப்பன் ஏகாந்தமாக விடப் பட்டு நடை சாத்தப் படுகிறது.
அனைவருக்கும், மலர், சந்தனம், பால், சுண்டல்/சாத ப்ரசாதங்கள் விநியோகம் செய்யப் பட்டு இறையருளோடு இல்லம் திரும்பும் மனநிறைவை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
மதுரையே சிவராஜ தானி.
மதுரையே கௌரீ லோகம்.
மதுரையே பூலோக ஸ்வர்க்கம்.
நம்முள் இருப்பது மீனாக்ஷியே.
நற்றுணையாவது
சுந்தரேசரே.
சிவம் சுபம்
No comments:
Post a Comment