Sunday, June 30, 2019

நமசிவாயம் நமசிவாயம் (Bhajan)

ஓம்

நமசிவாயம் நமசிவாயம்
நமசிவாயம் நமசிவாயம்
நமசிவாயம் நமசிவாயம்
நமசிவாயம் நமசிவாயம்

நமசிவாயம் நல்லருள் பொழியும்
நமசிவாயம் நல்லோரை இணைக்கும்
நமசிவாயம் நல் மனம் உறையும்.
நமசிவாயம் நற்கதி அளிக்கும்

மஹாதேவம் மன பலம் அளிக்கும்
மஹாதேவம் மதிப்பைக் கூட்டும்
மஹாதேவம் மங்கலம் சேர்க்கும்
மஹாதேவம் மழை தருவிக்கும்

சிவாய என்றிட சித்தம் தெளியும்
சிவனைத் துதித்திட ஞானம் ஒளிரும்
சிவனை வலம் வர சந்ததி சிறக்கும்
சிவனைக் கண்டிட சுபம் சுரக்கும்

வாமதேவன் அர்தநாரி
வாமதேவன் அம்மை யப்பன்
வாமதேவனே ஆதி குரு
வாமதேவனே சங்கர நாரணன்

யானைத் தோலை போர்த்திய தேவன்
யாதும் ஆன ஆதி பரா பரன்
யாதும் அவனது செயலாகும்.
யாதும் அவனது அருளாகும்.

பஞ்சாக்ஷரம் ஜெபித்திடுவோம்
பஞ்சம் பசிப் பிணி கடந்திடுவோம்.
பரமேசனைக் கண்டிடுவோம்.
பரமேசனுள் நிலைத்திடுவோம்.

நமசிவாயம் நமசிவாயம்
நமசிவாயம் நமசிவாயம்
நமசிவாயம் நமசிவாயம்
நமசிவாயம் நமசிவாயம்

சிவம் சுபம்

We can chant NAMASIVAAYAM
at the end of each stanza.
Sivam subam

Natarajar Pathhu - 2 Song - Maanada Mazhuvaada



நடராஜர் பத்து - பாடல் 2

(திரு)விருத்தம் - அப்பர் பெருமான்

படைக்கல மாக வுன் னாமத் தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன்
இடைக்கல மல்லேன் எழுபிறப் பும் உனக் காட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித் தூநீறணிந்து உன்
அடைக்கலங் கண்டாய் அணிதில்லைச் சிற்றம் பலத்தரனே.

நடராஜர் பத்து - பாடல் 2
ப்ருந்தாவன சாரங்கா

மானாட மழுவாட மதியாட புனலாட  - மங்கை சிவகாமி ஆட
மாலாட நூலாட மறையாட திரையாட  - மறை தந்த பிரமனாட
கோனாட வானுலக கூட்டமெல்லாம் ஆட - குஞ்சர முகத்தானாட
குண்டலம் இரண்டாட தண்டை  புலியுடை  ஆட - குழந்தை முருகேசனாட
ஞான சம்பந்தரோடு இந்திரரதி பதினெட்டு - முனி அஷ்ட பாலகரும் ஆட
நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட - நாட்டிய பெண்களாட
வினையோட உனை பாட  எனை நாடி இதுவேளை  - விருதோடு  ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராசனே
தில்லை வாழ் நடராசனே.... தில்லை வாழ் நடராசனே

சிவம் சுபம்

தமிழ் த்யாகைய்யரின் ப்ரதோஷ அருள் அமுது (Paapanaasa Sivan Sir's song)



தமிழ் த்யாகைய்யரின் ப்ரதோஷ அருள் அமுது

சுருட்டி ராக பாற்கடல் திரட்டு

சிவபெருமான் க்ருபை வேண்டும்! - அவன்
திருவருள் பெற வேண்டும்! வேறென்ன வேண்டும்?!

அவலப் பிறப்பொழிய வேண்டும்! - அதற்கு வித்தாம்
அவமாயை அகல வேண்டும்! வேறென்ன வேண்டும்?!

தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சாந்த
சுகவாழ்வு வாழ வேண்டும்! வேறென்ன வேண்டும்?!

காமம் முதல் பகையும் குரங்கு மனமும் செத்து
இராமதாசன் உய்ய வேண்டும்! வேறென்ன வேண்டும்?

சிவம் சுபம்

திருநீற்று மருந்து



"திருநீற்று மருந்து"

பசி தீர்க்கும் மருந்து
பிணி நீக்கும் மருந்து
குணமளிக்கும் மருந்து
குலம் காக்கும் மருந்து

அருள் பொழியும் மருந்து
இருள் அகற்றும் மருந்து
சுகமளிக்கும் மருந்து
சுபமளிக்கும் மருந்து

எளிமையான மருந்து
ஏற்றமளிக்கும் மருந்து
பொலிவருளும் மருந்து
கனிவருளும் மருந்து

இறை யணியும் மருந்து
இணையில்லா மருந்து
கனகம் பொழி மருந்து
ககனம் போற்றும் மருந்து

வேதத்திலுள்ள மருந்து,
கதியளிக்கும் மருந்து,
சிவமாக்கும் மருந்து
திருநீற்று மருந்து......

திருஆலவாயனின் மருந்து

சிவம் சுபம்

எத்தனை முருகன் சென்னையிலே (On Murugas diverse forms in Chennai)



ராகம்

எத்தனை முருகன் சென்னையிலே அத்தனையும் அருள் வடிவமம்மா

காபாலி மைந்தன் கருத்தினுள் புகுவான், கந்த கோட்டத்தான்  சொந்தம் ஆவான்
வொற்றியூரான் மகன் வெற்றிகள் குவிப்பான்,
வால்மீகீயூர் வள்ளல் வரமழை பொழிவான்,

வடபழனி ஆண்டவன் வான்மழை பொழிந்தால், குன்றத்தூரான் குடையாய் காப்பான்
வல்லக்கோட்டையன் வலிமை சேர்ப்பான்
போரூர் வீரன் காவல் இருப்பான்

பாம்பனார் வேலன் பகை கடிவான்
சிறுவாபுரீசன் பெருவீடருள்வான்
ஆறுபடையும் இங்கே உண்டு
முத்துக்குமரனை இங்கேயே காணலாம்

இன்னும் எத்தனை குமரன் தலங்கள், அத்தனையும் காண
(இப்) பிறவி போதுமோ
குமரா குமரா என்றே கூவி குமரனை நம்முள்ளே தெரிசித்திடுவோம், குமரன் அருளில் திளைத்திருப்போம்.

சிவம் சுபம்

சரணம் கூவி ஒடி வந்தேன் ஐய்யப்பா (Ayyappa - Punnaga VaraaLi)



 புன்னாக வராளி

சாக்க்ஷாத் விஷ்ணும் ஸ்வயம் மாதா, பிதா யஸ்ய மஹேஸ்வர:
தம் வந்தே ஸர்வ பூதேசம் ஸாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

சரணம் கூவி ஒடி வந்தேன் ஐய்யப்பா - உன்
சரண கமலம் நாடி வந்தேன் மெய்யப்பா

இருமுடி சுமந்து வந்தேன் ஐய்யப்பா,    உன் திருவடியைச் சூட வந்தேன் மெய்யப்பா

காடு மலை கடந்து வந்தேன் ஐய்யப்பா, எனமனக் கசடுகளைப் போக்கிவிடு மெய்யப்பா

பம்பையில் குளித்து வந்தேன் ஐய்யப்பா, என் சிந்தையில் நிறைந்திரு மெய்யப்பா

திருமலையனைத் தாயாய் கொண்ட ஐய்யப்பா,
அண்ணாமலையன் செல்வனே மெய்யப்பா

சபரிமலை ஜோதியே ஐய்யப்பா,  அபரிமிதக் கருணையே மெய்யப்பா

சிவம் சுபம்

அனலில் தோன்றிய அருட் புனலே + கதி என்றடைந்தேன் உனையே



அனலில்  தோன்றிய அருட் புனலே
ஆலவாய் உறை அமுதே
இச்சை க்ரியை ஞானமே
ஈசனை வலம் வைத்த சுந்தரியே
உயர் நான்மாடக் கூடல் வாழ்வே
ஊழி முதல்வியே
எழில் மரகத வடிவே
ஏழு ஸ்வர ஒலியே
ஐந்தொழில் புரி அங்கயற் கண்ணியே
ஒப்பிலா பிள்ளைத் தமிழே
ஓங்கி உலகளந்த நாரணியே
ஔவையும் வள்ளுவனும் கண்ட ஆதியே 

நின்னடிமலர் என் சிரம் வைப்பாயே. 



கதி என்றடைந்தேன் உனையே, சத்
கதி அளித்தென்னை காப்பாயே

என் துணை யென்றும்  நீயே,
தூய தமிழே! அன்னை மீனாளே

(சங்கபதும) நிதியெனக்கென்றும் நீயே
நந்நெறி வழி எனை நடத்திடு வாயே
ஜெகன் மாதா (என்) ஜெகத்குருவே,
ஜெகன் மோஹன சுந்தரியே, 

கிள்ளை மொழி கேட்டருள்பவளே, இப்
பிள்ளை முறை செவி மடுப்பாயே,
உன் திருக்கோயிலே என் ஸ்வர்க்கம்
என் உளமே உன் திருக்கோயில்

சிவம் சுபம்

Namasivaya and Narayanaa Bhajan



ஆதி அந்தமில்லா நமசிவாய
அவதார மெடுக்கும் நாராயணா
பவள மேனியா நமசிவாய
பச்சை மாமலையே நாராயணா 1

பனிமலை ஆடும் நமசிவாய
பாற்கடல் யோகா நாராயணா
அரவு சூடும் நமசிவாய
அரவணை துயிலும் நாராயணா 2

அன்னையுள் அப்பனே நமசிவாய
அன்னை ஹ்ருதயனே நாராயணா
அருட்பெருஞ் ஜோதியே நமசிவாயா
ஆனந்த ஜ்வலிப்பே நாராயணா 3

நதியைத் தாங்கும் நமசிவாய
கடலில் மிதக்கும் நாராயணா
சதா சிவா நமசிவாய
சுத்த மாயா நாராயணா 4

ஐந்து முகத்து நமசிவாய
ஐயிரண்டு  வடிவ நாராயணா
சக்ர தான நமசிவாய
சக்ர தரனே நாராயணா 5

ஆலடி குருவே நமசிவாய
ஆலிலை சிசுவே நாராயணா
திருநீறு மணக்கும் நமசிவாய
திருமண் ஒளிரும் நாராயணா 6

நடன சபாபதி நமசிவாய
சயன ஸ்ரீபதி நாராயணா
திருமறை நாதா நமசிவாய
திவ்ய ப்ரபந்தா நாராயணா 7

திரு ஆதிரையா நமசிவாய
திருவோணா நாராயணா
கந்தனை ஈன்ற நமசிவாய
கந்தனின் மாமனே நாராயணா 8

வேதாச்சார்யனே நமசிவாய
கீதாச்சார்யனே நமசிவாய
ஆதிகுருவே நமசிவாய
நீதி குருவே நாராயணா 9

த்ரயோதசி தாண்டவா நமசிவாய
ஏகாதசி வ்ரதனே நாராயணா
லிங்கோத்பவனே நமசிவாய
ஸ்தம்போத்வனே நாராயணா 10

காளை வாஹனா நமசிவாய
கருட வாஹனா நாராயணா
வில்வம் சூடும் நமசிவாய
துளசி யணியும் நாராயணா 11

அம்மையப்பனே நமசிவாய
அருமை மாமனே நாராயணா
ப்ரபஞ்ச ஜனகனே நமசிவாய
ப்ரஹ்ம ஜனகனே நாராயணா 12

ஸ்படிக ப்ரகாசா நமசிவாய
சாளக்ராமா நாராயணா
அண்ணாமலையே நமசிவாய
அஹோபிலனே நாராயணா 13

அம்பலவாணா நமசிவாய
அரங்க நாதா நாராயணா
ஞான ஜோதியே நமசிவாயா
மாய நீதியே நாராயணா 14

ஆலவாயனே நமசிவாய
அம்ருத கலசனே நாராயணா
மோஹன ரூபா நமசிவாய
மோஹினி ரூபா நாராயணா 15

இராம நாதா நமசிவாய
இராம ரூபா நாராயணா
தாரக உபதேசி நமசிவாய
தாரக உருவே நாராயணா 16

எளிமையின் வடிவே நமசிவாய
எழிலின் உருவே நாராயணா
அன்பருள் கலப்போய் நமசிவாய
அடிமலர் தருவோய் நாராயணா 17

அறுபத்து மூவரின் நமசிவாயனே
ஆழ்வார்கள் கண்ட நாரயணனே
அரி அர சங்கர நாராயணனே
அற்புத சத்திய ஒரே இறைவனே 18

சிவம் சுபம்
நாராயணம் நல் மங்கலம்.

கொடி வடிவம் (Meenakshi Slokam)



கொடி வடிவம்
கோடி நாமம்
அருள் குடம்
அன்பே அவள் இருப்பிடம்.

கண் படைக்கும்
மனம் இரங்கும்.
கரம் காக்கும்.
பதம் சேர்க்கும்.

அனல் கன்னி
ஆலவாய் கன்னி
அன்னை ஆயினும் கன்னி
அங்கயற்கண்ணி.

சிவம் சுபம்

இறை (ராக) மாலை (Bhajan)



இறை (ராக) மாலை

எருக்க மாலை சூடிக்கு நமஸ்காரம்.
இரக்க மன தந்தனுக்கு நமஸ்காரம்.

கடப்ப மாலை சூடிக்கு நமஸ்காரம்.,
கந்தசாமி வள்ளலுக்கு நமஸ்காரம்

மணிமாலை கழுத்தனுக்கு நமஸ்காரம், (சபரி)
மலை வாழ் ஐயனுக்கு நமஸ்காரம் 3

வில்வ மாலை சூடுவோர்க்கு நமஸ்காரம்
விஸ்வநாத சிவனுக்கு நமஸ்காரம்

செவ்வரளி ப்ரியைக்கு நமஸ்காரம்,
செம்மை சேர்க்கும் துர்கைக்கு நமஸ்காரம்

செங்கமலத் தாய்க்கு நமஸ்காரம்
சென்றடையாத் திருவிற்கு நமஸ்காரம் 6

வெண் கமல நங்கைக்கு நமஸ்காரம்
வேதன் நா மகளுக்கு நமஸ்காரம்

கடம்ப மாலை கழுத்தளுக்கு நமஸ்காரம்ர
கையில் கிளி வைத்தாளுக்கு நமஸ்காரம்

(நவ) ரத்ன மாலை சூடுவோர்க்கு நமஸ்காரம்
ராஜ சௌந்த்ர பாண்டியற்கு நமஸ்காரம  9

பாவை மாலை சூடுவோர்க்கு நமஸ்காரம்.
பாம்பணை ரங்கருக்கு நமஸ்காரம்

துளசி மாலை சூடுவோர்க்கு நமஸ்காரம்.
தூது நடந்த தூயனுக்கு நமஸ்காரம்.

தலைமாலை கழுத்தருக்கு நமஸ்காரம்
கால கால பைரவர்க்கு நமஸ்காரம். 12

நாம மாலை சூடுவோர்க்கு நமஸ்காரம்.
நாராயண தேவருக்கு நமஸ்காரம்.

அன்பு மாலை சூடுவோர்க்கு நமஸ்காரம்
அம்மையப்ப தேவருக்கு நமஸ்காரம்.

குஞ்சித மாலை சூடுவோர்க்கு நமஸ்காரம்
காஞ்சி மஹா ஸ்வாமிக்கு  நமஸ்காரம் 15

 (நாராயண) சேவை மாலை சூடுவோர்க்கு நமஸ்காரம்
சத்ய சாயி நாதருக்கு நமஸ்காரம்.

வடை மாலை சூடிக்கு நமஸ்காரம்.
வாயு புத்ர மாருதிக்கு நமஸ்காரம்.

பக்தி மாலை சூட்டுவோர்க்கு நமஸ்காரம்
பக்த சிரோன்மணிகளுக்கு நமஸ்காரம்  18


சிவம் சுபம்

Bhajan on Sri Swaami Hanuman and Sri Ganesha (Atyantha Prabhu - Adayar Bhajan)



"ஆத்யந்த ப்ரபு சரணப் பத்து"

இராகம் :  மாலிகா

ஆனைமுகன் அடி மலர் போற்றி
ஆஞ்சனேயன் பதமலர் போற்றி

ஆதிசக்தி புதல்வா சரணம் சரணம்
அஞ்சனை செல்வா சரணம் சரணம்
வாணனின் மைந்தா சரணம் சரணம்
வாயுவின் மைந்தா சரணம் சரணம் 1

அன்னை தவம் காத்தோய் சரணம் சரணம்
அன்னை உயிர் காத்தோய் சரணம் சரணம்
சிவ கணநாதா சரணம் சரணம்
ஸ்ரீ ராம தூதா சரணம் சரணம் 2

ஐந்து கரத்தோய் சரணம் சரணம்
ஐந்து முகத்தோய் சரணம் சரணம்
மோதஹ கரனே சரணம் சரணம்
வடைமாலை கழுத்தனே சரணம் சரணம் 3

ப்ரணவ ஸ்வரூபனே சரணம் சரணம்
தாரக ஸ்வாசனே சரணம் சரணம்
சங்கட ஹரனே சரணம் சரணம்
 சமய  சஞ்சீவியே சரணம் சரணம் 4

அரி ராமன் மருகனே சரணம் சரணம்
அரி ராமன் ஆலயனே சரணம் சரணம்
அறுகின் பெருமையே சரணம் சரணம்
துளசியின் தூய்மையே சரணம் சரணம் 5

தடைகளைத் தகர்ப்போய் சரணம் சரணம்
படைக்கலம் ஆவோய் சரணம் சரணம்
எங்கும் நிறைந்தோய் சரணம் சரணம்
என்றும் வாழ்வோய் சரணம் சரணம் 6

சோதரன் மணம் முடித்தோய் சரணம்
சோதரர்களை  இணைத்தோய் சரணம்
மரத்தின் நிழல் அமர் எளியா சரணம்
மலையைத் தாங்கும் வலியா சரணம் 7 

நவகோள் பணியும் கணேசா சரணம்
நவகோள் அண்டா ஆஞ்சனேயா சரணம்
கண்ணனின் காதை வரைந்தோய் சரணம்
கண்ணனின் கீதை கேட்டோய் சரணம் 8

சிவசக்தியை வலம் வந்தோய் சரணம்
சீதாராம பாதம் ஏந்துவோய் சரணம்
அவ்வை அகவல் நாதா  சரணம் 9
துளசிதாச சாலீசா சரணம்

ஸ்ரீ சிவசக்தி கணேசா சரணம்
ஸ்ரீ சீதாராம ஆஞ்சனேயா சரணம்
ஆத்யந்த ப்ரபுவே சரணம் சரணம்
ஆனைமுக ஆஞ்சனேய சரணம் சரணம். 10

சிவராம் சுபராம்.
சிவம் சுபம்

On Sri Arunachala



அண்ணாமலை
அற்புத சோதி மலை
அடி முடி காணா மலை
அமுதத் திருப்புகழ் சுரந்த மலை
அருணைப் பித்தன் (சேஷாத்ரி) சுற்றிய மலை
அய்யன் ரமணரை ஈர்த்த மலை
உண்ணாமுலையாளை உள் வைத்த மலை
விண்ணோரும் வலம் வரும் மலை
மலைமேல் சோதி ஒளிரும் மலை
மா தேவனே மலையாய்
நிற்கும் மலை.
கயிலையும் இதற்கு இணை இலை.

சிவம் சுபம்

அன்பெனும் பிடியுள் அகப்படும் (அண்ணா)மலை.
ஆராய்சிக்குப் பிடி படா மலை.
ஆகவே தான் அரியும் அயனும் இன்னும் அடி, முடியைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் மெய்யடியார்கள் கண்டு, பிடித்து, வருடி, சூடி, பாடி, பரவி, (அதனுள்) கலந்தும் விட்டனர்.

சிவம் சுபம்.

நாள் முழுதும் "இறையன்பு"



நாள் முழுதும் "இறையன்பு"

அன்னையே என்று கண் விழித்தேன்
அப்பா என்று எழுந் தமர்ந்தேன்
குருவே என்று கரம் குவித்தேன்
தெய்வமே என்று நாளைத் துவங்கினேன்

கணபதி என்று பல் துலக்கி
முருகா என்று நீராடி
ஐயனே என்று ஆடை புனைந்து
சிவ சிவ என்று திரு நீறணிந்தேன்

சக்தி என்று குங்குமம் இட்டு
கலைமகளே என்று எண்ணை ஊற்றி
திருமகளே என்று விளக்கேற்றி
வீழ்ந்து வணங்கி தொழு தெழுந்தேன்.

பூரணி என்று உணவுண்டு,
நந்தியை வணங்கி பணிக்கு சென்று,
கருடா என்று வாகனமோட்டி
நாரணா என்று பணியாற்றி
பைரவன் துணையோடு
இல்லமடைந்தேன்.

நாமம் நவின்று மாலையிலும்
இறையைத் துதித்து உணவுண்டு
வ்ருகோதரா என்று நன்றியுடன்
நலமாய் நிறைவாய்   கண்ணயர்ந்தேன்.

என்ன செய்தாலும் இறை நினைவு
எப்பொழுதும் இறை நினைவு
இறையே நம் உறுதுணை
இறையருளே நிலைத்த திருவருள்.

சிவம் சுபம்

OM Sri Durgae Siruvaachoor Su-nilayae



பூபாளம்

விருத்தம் - ஸ்லோகம்**

OM Sri Durgae Siruvaachoor Su-nilayae
Badra-pradhae baagyathae
Bakthair architha paadha padma yugaLae
Sarva-svadhaa-nodhyathae,
Sarvaaarishta vinaacha-naiga-niradhae
Simhaadhi-roodhae Ambikae
Bhadrae Maadhuri  bhaktha kalpa lathikae
Sri (Mathura) KaaLikae paahimaam

அறிவோம் ஒன்றே அவள்  நாமமே
அடி  பணிவோம் அவள் மலர் பாதமே

அவளே அன்னை மதுர காளி
அரணாய் நம்மை காக்கும் வேலி

கொடியினும் மெல்லிய இடை. உடையாள் (அன்னை)
கடலினும் அகன்ற மனமுடையாள் (வற்றா)
கருணை பொழியும் கண்களுடையாள் - அவள்
நம்மை என்றும் காத்து ரக்ஷிப்பாள்

சிங்க வாஹனம் கொண்டவள் 
தங்கத் தேரில் ஏறி பவனி வந்தாள்
சூலம் ஏந்தி வலம் வந்தாள்  -  எம்
சூழ்  வினை களைந்தே பலம் சேர்த்தாள்

காளி ஸ்ரீ மதுரகாளி
காளி ஸ்ரீ மதுரகாளி
காளி ஸ்ரீ மதுரகாளி
காளி ஸ்ரீ மதுரகாளி

சிவம்  சுபம் 

**  from the Ashtothram booklet.

ஆறு முகனே (Slokam)



ஆறு முகனே
பன்னிரு கண்ணனே
பவளச் செவ்வாயனே
பன்னிரு கரத்தானே
பாற்கடல் மனத்தானே
உன்னிரு பதம்
என் சிரம் வைத்தாள்
ஐயனே.

உன் திருப்பகழே இசைப்பேன்
சஷ்டி கவசம் சூட்டுவேன்.
சந்நிதி முறை வழுவேன்.
அருட்பா அமுது
படைப்பேன்.
பதமலர் தந்தாள்
மெய்யனே.

சிவம் சுபம்

ஸ்ரீ சபரி கீதம்/Sri Sabari.Geetham (Anthem)



About to reach Kottayam - en route to Sri Sabari Mala - 11062019 - 4.19 am




ஸ்ரீ சபரி கீதம்/Sri Sabari.Geetham

சிவ ஹரி சுதனே பவபய ஹரனே சபரியின் மா தவமே

அச்சன் கோயில் அரசே ஆரியங்கா அய்யனே குளத்துப் புழை பாலா,
எரிமேலி சாஸ்தா பம்பா வாசா
பந்தள ராஜ குமாரா

வன்புலிவாஹன வீரா
மகிஷி மர்தன தீரா
பதினெட்டாம் படி வாழ் தேவா

ஜெய ஜெய சங்கர மோஹினி சுதனே ஜோதி ஸ்வரூப வினோதா  சரணம் சரணம் சரணம் நின் பதகமலம் தரணும் .... ஸ்வாமி

Siva Hari Sudhanae Bava Baya Haranae
Sabariyin maa Thavamae

Achchan koyil arasae, Aariyangkaa ayyanae, Kuzhathu-puzhai baalaa
Erimeli Saaasthaa Pambaa vaasaa
PandhaLa Raaja kumaaraa

Van puli vaahanaa Veeraa
Mahishi mardhana Dheeraa
Pathinettaam padi vaazh Devaa

Jaya Jaya Sankara Mohini Sudhanae,
Jyothi Swaroopa Vinodhaa,
SaraNam SaraNam SaraNam
Thava Padha Kamalam tharaNum.... Swaami.

ஸ்வாமி சரணம்/Swaami SaraNam
சிவம் சுபம்/ Sivam Subam

ஆனந்த தரிசனம் தந்த ஐயன் (Suddha Dhanyasi)



ஐயன் சந்நிதி - 12.06.2019

சுத்தசாவேரி

ஆனந்த தரிசனம் தந்த ஐயன்
ஐந்து மலை வாழும் மெய்யன்

அருள் வடிவான அப்பன்
அமைதித் தவம் புரி மெய்யப்பன்

கண்ணன் அவன் அன்னை    முக்கண்ணன் அவன் தந்தை, 
ஐங்கரன் அவன் அண்ணன்
பன்னிருகண்ணன் அவன் சோதரன்

புலிமேல் வலம் வருவான்
புனிதரைக் காத்து நிற்பான்
நெய்யபிஷேகம் ஏற்பான், மெய்யன்பருள் ஒளிர்வான்... ஜோதியாய் ஒளிர்வான்.

சிவம் சுபம்.

சிம்ம முகம் கொண்டவன்.



சிம்ம முகம் கொண்டவன்.
சிசுவின் மனம் கொண்டவன்.
அன்னையை மடிவைத்தவன்.
அன்பனை உளம் வைத்தவன்.
தூணைத் தாயாய்க கொண்டவன்.
தூயோரின் துணை யானவன்.
வேண்டுமுன் வருபவன்.
வேண்டிய தெல்லாம் தரும் தேவனவன்.
சரணாகதி அடைந்தோரின் சந்ததிக் காவலன் - ஸ்ரீ லக்ஷ்மீ நரசிம்மன்.

சிவம் சுபம்

Mahaperiyavaa Bhajan - Mohanam (உம்மாச்சி தாத்தா வாங்க)



உம்மாச்சி தாத்தா வாங்க - உங்க
அருளாசியை அள்ளித் தாங்க
கண்ணாமூச்சி ஆடாமல் எங்க
கவலையைத் தீர்க்கும் தெய்வம் நீங்க

அனுஷத்துதித்த ஆதிரையர் நீங்க
ஆதிசிவனாம் எங்கள் இறைவன்
அன்னை காமாக்ஷி போலே
தவக்கோல காமகோடி  ஈசன்

இருவர் காணா பதத்தை
எமக்குக் காட்டிய இறைவன் நீங்களே
இன்றும் என்றும் எம்மிடை
நடமாடும் தெய்வம் நீங்களே ஸ்வாமி

அன்று மௌனமாய் வேதம் உறைத்த
ஆலடியரசரும் நீங்களே
இன்று எமக்காய் திருவாய்
மலர்ந்த தெய்வக் குரலும் தங்களதே

ஒருபிடி அரிசி திட்டம் அதனால்
ஏழை எளியோர்  பசி போக்கி
அன்ன பூரணித் தாயாய் எங்கள்
இதயங்களில்  அமர்ந்தீரே

அநாதை என்று எவரையும்
தள்ளிடா அம்மை யப்பன் ஆவீரே
அனைவரும் முக்தி அடைய வழியை
காட்டிய குரு நாதரே

அரி அர பேதம் களைந்த
த்வைதாத்வைத சேது ராமரே
ஆண்டாள் சம்பந்தர் பதிகங்களை
பரிந்துரைத்த பவித்ரரே

அன்னிய மதத்தினரும் மதிக்கும்
அற்புத துறவற வேந்தரே
அஞ்ஞான இருள் அகற்றிடும்
மெய் ஞான விஞ்ஞான வித்தகரே

ப்ரதோஷ தொண்டர் வலம் வந்த
ப்ரணதார்த்தி ஹர சிவ ஸ்வாமி, (இன்)
இசை கான ஸரஸ்வதி போற்றிய
மணி மண்டப நாதரே

திருமேனி யெங்கும் திருநீறு
திருவாய் மலரும் "நாராயணா"
திருக்கரம் பொழியும் வற்றா கனகம், உம்
திருவடியே கைலாயம்

உலகெங்கும் ஒளிரும் ஜோதி
அன்பர் மனத்தே நிலவும் நிம்மதி
எம்மைக் காக்கும் தயா நிதி
உம்மை அடைந்தோம் சரணாகதி

ஜெய ஜெய ஜெய ஜெய சங்கர தேவா
ஜெய  ஜெய சந்திர சேகர தேவா
ஜெய ஜெய ஜெய ஜெய சங்கர தேவா
ஜெய  ஜெய சந்திர சேகர தேவா

சிவம் சுபம்

ஈச்சங்குடி அன்னையின் தவமே + ஸ்ரீ பராமாச்சார்ய கீதம் (Mahaperiyavaa)



ஈச்சங்குடி அன்னையின் தவமே
ஸ்வாமிநாத குரு குஹரே,
மஹா ஸ்வாமியாம் மஹாதேவரே
அத்தி பூத்தது போல் வந்த வரதரே
அன்னை காமாக்ஷியின் கருணையே,
பரமாச்சார்ய பர ப்ரஹ்மமே
உம் பதகமலமே எம் படைக்கலமே, எமக்கு அடைக்கலமே.

ஸ்ரீ பராமாச்சார்ய கீதம்

விழுப்புரம் அளித்த மெய்ப்பொருளே, எங்கள் அனுஷத் திறைவா வருக,
ஆலடி காலடி தேவனின் வடிவே,
காம கோடி ஈசா, பாதம் நோக காதம் நடந்து வேதம் காத்த முதல்வா!

அறம் வழுவா தவத்தோய்
துறவுக்கு பெருமை சேர்த்தோய்
குஞ்சித பாத சிரத்தோய்

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர பரமாச்சார்ய மூர்த்தி, அரியே, அரனே, குருவே, அன்னை சக்தியின் கரமே!

சிவம் சுபம்

Siruvaachoor su-nilayae (Sivapantuvaraali)

OM Sri Durgae Siruvaachoor su-nilayae

Bhadra pradhae Bhaagyathae Bhakthair architha paatha padma yugaLae, Sarva-svadaa-nodyathae, sarvaarishta vinaachaaiga niradhae, Simhaadhi-roodae Ambikae Bhadrae Maadhuri Bhaktha kalpa lathikae, KaaLikae, Sri Madura KaaLikae paahimaam paahimaam.

OM Madura KaaLi Omkaara roopiNiyae
Sri Madura KaaLi
Siruvaachoor Vaasiniyae,

Hey Madura KaaLi yengum NirainthavaLae
Vaa  Madura KaaLi vanth-aruL purivaayae

Kaa Madura KaaLi karuNai maa mugilae,
Thaa Madura KaaLi tharuNa maa mazhaiyae
Paar Madura KaaLi en paavamellaam theera..
Iru Madura KaaLi en ithayamathil inithae....

Sivam Subam

குணசீலம் வாழும் பெருமாளே (Bilahari)



பிலஹரி

குணசீலம் வாழும் பெருமாளே
குணசீலர் உள்ளுறைத் திருமாலே

செங்கோல் ஏந்தும் கதாதரனே
செம்மையாய் வாழச் செய்வானே

பாற்கடல் துயிலும் தேவனவன்
பக்தருக்காய் புவி வந்தானே
கொள்ளிடக் கரையில் கோயில் கொண்டு
உடல் மன ரோஹம் தீர்ப்பவனே

ப்ரஸன்ன வேங்கடேஸ்வரனே
பிழை பொறுத்தருளும் தயாகரனே
அலைமகளை மனம் வைத்தவனே
அலைபாயா மனம் அருள்வானே

ஆயிரம் கோடி அன்பர்களின் அபிமானம் கொண்ட அரி இவனே,
பன்னிருவரின் ப்ரபந்தங்களை பரிவோடு செவிமடுப்பானே
பதமலர் தந்து காப்பானே

சிவம் சுபம்

Gunaseelar is also the name of the Rishi to whom Swami gave darshan here.

அழகு ரங்கன் ஆச்ரித வத்சலன்



அழகு ரங்கன்
ஆச்ரித வத்சலன்
இன்முக மலரான்
ஈசனை சிரம் வைத்தவன்.
உமையாள் சோதரன்
ஊழி முதல்வன்
எட்டெழுத்துப் பெருமாள்
ஏழுலகும் ஆள்பவன்
ஐயமின்றி அருள்வான்.
ஒப்பிலான்
ஓங்கி உலகளந்தவன்
ஔஷத தந்வந்த்ரி

அடிமலர் சிரம் தாங்கி
உய்வோம்.

சிவம் சுபம்

Mahaperiyavaa Song ( தங்க ரதம் ஏறி வருகிறார் - sivaranjani)



சுப்ரமண்ய சுதம் தேவம்  காமக்ரோதாதி மர்தனம்
மஹாலக்ஷ்மீ  ஹ்ருதயானந்தம் சந்த்ரசேகரம் வந்தே ஜகத்குரும்

தங்க ரதம் ஏறி வருகிறார்
தானே அதுவான தவ வேந்தர்
வேத கோஷம் முழங்க வருகிறார்
வேதாகம பாலனர் வருகிறார்

திருவடி பதித்து நடந்தவர்
திருத் தேர் ஏறி வருகிறார்
திருமுறை முழங்க வருகிறார்
திருவருள் பொழிந்து வருகிறார்

ஜெயந்திரர் உடன் வருகிறார்
விஜயேந்திரர் தொழ வருகிறார்
மஹாஸ்வாமி பவனி வருகிறார்
மஹாதேவர் பவனி வருகிறார்

காஷாய பூஷணர் பவனி வருகிறர்
(அன்னை) காமாக்ஷி போல் அருள் பொழிகிறார்
ஷண்முக ஸ்வாமிநாதர் வருகிறார்
ஷண்மத மஹாஸ்வாமி வருகிறார்

அனுஷ நாதர் பவனி வருகிறார்
அத்தி வரதரை அழைத்து வருகிறார
ப்ருந்தாவனேசர் பவனி வருகிறார்
ப்ரத்யக்ஷ பரமேசர் பவனி வருகிறார்

திருநீற்றுச் செம்மல் பவனி வருகிறார்
திருநீறளித்து பவனி வருகிறார்
திருமகள் செல்வர் பவனி வருகிறார்
திருமுகம் மலர்ந்து பவனி வருகிறார்

நாதஸ்வரம் முழங்க பவனி வருகிறார்
நாத ஸரஸ்வதியவர் பவனி வருகிறார்
பிறைசூடி யவர் பவனி வருகிறார்
(நம்) பிறவிப் பிணி களைய பவனி வருகிறார்

ஜெய ஜெய சங்கர தேசிகமே!
ஜெய சந்த்ரசேகர தேசிகமே!
ஹர ஹர சங்கர தேசிகமே!
ஹர சந்த்ரசேகர தேசிகமே!

சிவம் சுபம்

சதுர்த்தி நாயகன் துணை



சதுர்த்தி நாயகன் துணை

மூக்ஷிக வாஹனன் நிழலாய் தொடர்வான்
மோதஹ ஹஸ்தன் மன நிறைவளிப்பான்
சாமர கரணன் நற் செய்தி கொணர்வான்
விளம்பித சூத்ரன் நந்நெறி புகட்டுவான்

வாமன ரூபன் ஞானகுரு ஆவான்
மஹேஸ்வர புத்ரன் மங்கலம் பொழிவான்
விக்ன விநாயகன் வினைகள் களைவான்
பாசாங்குசதரன் பகைமை   போக்குவான்

ஆசாபூரகன் ஆரோக்யம் காப்பான்
தந்த முகன் தலைவிதியை மாற்றுவான்
விகட ராஜன் அற்புதம் செய்வான்
சர்வாயுதன் சந்ததி காப்பான்

கன்னி மூலன் கருத்தில் நிலைப்பான்
ஸ்கந்த சோதரன் வெற்றிகள் குவிப்பான்
ஆதி விநாயகன் அன்பைப் பொழிவான்
சித்தி விநாயகன் முத்தியும் தருவான்

பால விநாயகன் சீலம் காப்பான்
ஈச நந்தனன் என்றும் துணையாவான்
ஈஸ்வரி நந்தனன் இதயத்துள் அமர்வான்.
ஆனைமுகன் அவன் தன்னையே தருவான்.

சிவம் சுபம்

அன்னையொரு பாகனை (Ananda Bhairavi) and காசி அன்னபூரணியம்மை திருவருட்பா (Raaga Maalika)

ஓம்


வெள்ளிச் சிந்தனை

விருத்தம் - ஆனந்த பைரவி

அன்னையொரு பாகனை
ஆலவாய் சுந்தரனை
ஆதி குரு நாதனை
ஆடலில் வல்லானை,
கண்ணுக்கு இனியானை
அன்பர் மனத்துள் உறைவானை
அவர் சொல்லும் செயலும் ஆனானை,
அடி மலர் தந்து ஆட் கொள்வானை
அகம் வைத்து ஆன்ம சுகம் பெருவோம்

காசி அன்னபூரணியம்மை   திருவருட்பா **

ராக : மாலிகா                Raaga : Maalikaa

கன்னியாகுமரி அருள் காந்திமதி மீனாக்ஷி
கருணை பர்வத வர்த்தனி
கமலை பராசக்தி சிவகாம சுந்தரி
காழி உமை பிரம வித்தை

தன்னிகரில்லா ஞான அபய வரதாம்பிகை
தையல் அபிராமி மங்கை தந்த அகிலாண்டநாயகி அறம் வளர்த்தவள் தண்ணருள் செய் காமாக்ஷி இங்கு

என்னை ஆள் கௌரி ஜ்வாலாமுகி உண்ணாமுலை  இலங்கு நீலாயதாக்ஷி
எழில் ப்ரமபராம்பிகை பார்வதி ஆதி
எண்ணிலா நாம ரூப

அன்னையாய் காசி முதலாகிய தலத்து விளையாடிடும் விசாலாக்ஷியாம்
அண்டகோடிகள் பணி அகண்ட பூரணி எனும்
அன்னபூரணி அன்னையே

**
தருமை ஆதினம்  பத்தாவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் அருளியது.

சிவம் சுபம்

(காழி - சீர்காழி)
(அறம் வளர்த்தவள் - தர்மஸம்வர்த்தனி)

சென்னையிலோர் அனந்தபுரி (Amruthavarshini)



அம்ருதவர்ஷிணி

சென்னையிலோர் அனந்தபுரி, அதுவே ஆனந்த அம்ருத புரி

அரவணை துயிலும் மாதவனை,
மூவிலைக் கொண்டவன் தொழும் மாதேவனை கண்டு தொழலாம், (அவர்) அருளை உண்டு நெகிழலாம்.

சுதர்சன சுந்தரனை வலம் வைத்து  ஸ்ரீ சக்ர துர்கையை இடம் வைத்து
ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹனை உடன் வைத்து நம் பரமகுரு சமைத்த பத்மநாப புரி

நாபிகமலத்தில் பிரமன் அமர,  (நம்) அன்னையர் இருவர் பாதம் வருட,  முப்பத்து முக்கோடி தேவரும் புடை சூழ போக சயனனின் திவ்ய தரிசனம் கண்டோர்க்குடனே பாப விமோசனம்.

கைலாயம் வைகுண்டம் தேட வேண்டாம், சத்திய லோகத்திற்- கலைய வேண்டாம், மூவுலகும் இங்குண்டு, மும்மூர்த்திகளின்
பேரருள் உண்டு மூப்பு பிணியின்றி வாழ்ந்திடுவோம், முத்தியும் பெற்று உய்ந்திடுவோம்.

சிவம் சுபம்

இறைவனையே காத்த இணையிலான் (Kaapi)



காபி

இறைவனையே காத்த இணையிலான்
ஈசனருள் கொண்ட புனித அனுமன்
செய்வதனைத்தும் அமானுஷ்யம், ஆயினும்
பணிவே உருவான பண்பின் இமயம்.
இறவாது இன்றும் வாழும் ஒரே தேவன்.
இதயத்தில் இறையாலயம் சமைத்த பூசலார் நிகர் தொண்டன்
இருபதம் சிரம் தாங்கி இறவாது வாழ்வோம்.

அஞ்சனை செல்வா என்றேன், என் அச்சம் பறந்தோடியதம்மா

வாயு மைந்தா என்று வாயார அழைத்தேன், வானம் என் கைக்கு எட்டியதம்மா

இராம தூதா என்று  அலறினேன், வெற்றிச் செய்தி உடன் வந்ததம்மா
சீதையைக் காத்தவா என்று கை குவித்தேன், பெரும் ஆபத்தெனை விட்டு அகன்றதம்மா

சஞ்சீவி ராயா என்று பணிந்தேன்,
மரண பயம் மறைந்த தம்மா
இராம சேவகா என்று ஜெபித்தேன்
அனுமனுள் ராமனைக் கண்டேன் அம்மா.

சிவம் சுபம்

கடவுள் ஒருவன் தானே (suddha dhanyasi)



சுத்த தன்யாசி

கடவுள் ஒருவன் தானே, பற்பல கோலம் கொள்வானே

நம்முள் ஒளிரும் அவனே, தொல்லுலகெல்லாம் நிறைவானே

அம்மை யப்பனாய் நமை படைத்தான்,
ஆதி குருவாய் நெறிப் படுத்தி
உயர் நலமெல்லாம் உவந்தளித்து  ஆட் கொள்ளும் ஆண்டவன் அவன் தானே.

இரை யளிக்கும் இறை யவனே
நம் சீவனாம் சிவன் ஆவானே
சக்தி யாய் உடல் மன வலுவளித்து
நாராயணனாய் காத்திடுவான்,
நமசிவாயனாய் பிறப்பறுப்பான்.

சிவம் சுபம்

அழகிய சிங்கா (Bhajan)



" உலகெங்கும் நரசிங்கன்
அனபர்  உளமெங்கும் நரசிங்கன்"

அழகிய சிங்கா
அஹோபில சிங்கா
அரவணை சிங்கா, என்ன
அகமணை சிங்கா 1

உக்ர  நர சிங்கா
ஜ்வாலா முக சிங்கா
துஷ்டர் கால சிங்கா
சிஷ்டர் காவல சிங்கா 2

பாவன சிங்கா
க்ரோட நர சிங்கா
சினமிலா சிங்கா, 
சின்னக் குழந்தை மன சிங்கா 3

காரஞ்ச சிங்கா
யோக  நர சிங்கா
த்யான மருள் சிங்கா
ஞான மருள் சிங்கா 4

பார்க்கவ சிங்கா
சத்ர வட சிங்கா 
மா-லோல சிங்கா
மங்கல நர சிங்கா 5

ஸ்தம்போத்வ சிங்கா
சதுர்த்தசி நர சிங்கா
ப்ரதோஷ கால சிங்கா
ப்ரஹ்லாத வரத சிங்கா 6

ஸ்வாதி நரசிங்கா
ஜோதி நரசிங்கா
கடிகாசல சிங்கா
கபி தொழும் சிங்கா  7

கம்பர் கண்ட சிங்கா
காவிய நர சிங்கா 
கடிலக் கரை சிங்கா
பரிக்கல் நர சிங்கா 8

அல்லிக்கேணி சிங்கா
அருந்தவ சிங்கா
கொள்ளிடக்கரை சிங்கா
கொள்ளை அழகு சிங்கா 9

மந்த்ர ராஜ சிங்கா
மஹாதேவரின் சிங்கா
சங்கரரின் சிங்கா
கராவலம்ப சிங்கா 10

ராமானுஜ சிங்கா
ரங்க வரத சிங்கா
வேதாந்த சிங்கா
தேசிகேந்த்ர சிங்கா 11

மத்வ நரசிங்கா
முக்ய ப்ராண சிங்கா
துங்கா தீர சிங்கா
ராகவேந்த்ர சிங்கா 12

ஆழ்வாரின் சிங்கா
அழகுத் தமிழ் சிங்கா
ப்ரபந்த சிங்கா
பர்த்யக்ஷ சிங்கா 13

கோதை கண்ட சிங்கா
(பா) மாலை சூடிய சிங்கா
த்யாகய்ய சிங்கா
நாதமய சிங்கா 14

அன்னமய்ய சிங்கா
வேங்கட நர சிங்கா
புரந்தர நர சிங்கா
விட்டல நர சிங்கா 15

நந்த(வ)ன சிங்கா
பந்தமறு சிங்கா
ஊர்க்காடு சிங்கா
உயர் பரணி சிங்கா 16

திருமஞ்சன சிங்கா
திருமகள் உறை சிங்கா
இன்முக நர சிங்கா
இனிய பானக சிங்கா 17

குலதெய்வமே சிங்கா
 (என்) குல தனமே சிங்கா
சரணம் நர சிங்கா
சந்ததி கா சிங்கா 18

வஜ்ர தேக சிங்கா
வலிமையருள் சிங்கா
செம்மை யருள் சிங்கா, நின்
சேவையருள் சிங்கா 19

உலகெங்கும் சிங்கா, அன்பர்
உளமெங்கும் சிங்கா
நரஹரி சிங்கா
சுப ஹரி சிங்கா 20

சிவம் சுபம்

இத்தனைச் சாமிகள் யிருந்தும் (Amtruthavarshini)



அமிர்தவர்ஷிணி

இத்தனைச் சாமிகள் யிருந்தும் எங்கள் தாகம் தீர்க்க ஒரு சாமியும் கண் திறவாத தேனோ

வேண்டுமுன் அருள்வது தானே தெய்வம், எத்தனை முறை வேண்டியும் எமக்கருளாத தேனோ

பாவிகள் பல்கோடி யிருந்தாலும்,  புண்ணியம் செய்தோர் சிலரே ஆனாலும், இருவரையும் காத்தல் உம் கடமை யன்றோ ?
கந்தா கண்ணா கணேசா சபேசா, மாரி கருமாரி,  வருணரை தன் பணி செய்ய ஆணையிடுக

குற்றல் புரிதல் எம் குணம் ஆயினும் குணமாய்க் கொள்ளல் உம் தன்மை யன்றோ,  உயிரினம் பிழைக்க பயிரனம் தழைக்க தண்ணருள் பொழிந்து உம் பெருமை காப்பீர்

சிவம் சுபம்

அடைக்கலம், அடைக்கலம் சாமி எம்



அமிர்தவர்ஷிணி

அடைக்கலம்,  அடைக்கலம் சாமி எம் 
படைக்கலம் நீயே குழந்தை சாமி

வேண்டுமுன் அருளும் சாமி
வேண்டியதெல்லாம் தரும் குழந்தையானந்த சாமி

செயற்கரிய செய்யும் சாமி
செம்மை நலமருளும் சாமி
வர மழை பொழியும் சாமி....
வான் மழையும் பொழிய வேண்டும் சாமி

கருணை வாரிதி யல்லவோ
உம் பெருமை நான் சொல்லவோ
பிழை யெலாம் பொறுத்தருள்வீர்
தருண மழை பொழியச் செய்வீர்

உமை மடி தவழும் சாமி
உம் அடிமலர் பிடித்தேன் சாமி
அம்ருத வாரி பொழிந்தே
உயிரினம் பயிரினம் தழைக்கச் செய்வீர்... சாமி

சிவம் சுபம்

அழகப்பன் அவன் அருளப்பன்



(Yk)

அழகப்பன் அவன் அருளப்பன்
ஆலிலை மிதந்த குழந்தையப்பன்
குருவும் வாயுவும் கொணர்ந் தப்பன், குருவாயூரப்பன் ஸ்ரீ குருவாயூரப்பன்,

குருவாயூரப்பன் ஸ்ரீ குருவாயூரப்பன்

கண்ணப்பன் அவன் கருணை யப்பன், வெண்ணை திருடிய மாயப்பன்
பெண் மானம் காத்த ஆடையப்பன்
ஆநிறை மேய்த்த ஆவுடை யப்பன்

குருவாயூரப்பன் ஸ்ரீ குருவாயூரப்பன்

தூது நடந்த தோழப்பன்,
தேரோட்டிய குருவப்பன், கீதை உறைத்த ஞானப்பன், சூதை வென்ற தருமப்பன்

குருவாயூரப்பன் ஸ்ரீ குருவாயூரப்பன்

வேதம் மீட்ட மச்சப்பன்
பூமியைக் காத்த வராஹப்பன்
மந்திர மலை தாங்கும் கூர்மப்பன்
திருமலை உறையும் வேங்கடப்பன்

குருவாயூரப்பன் ஸ்ரீ குருவாயூரப்பன்

அரி யப்பன் நரஹரி யப்பன்
மூவுலகளந்ந வாமனப்பன்
இராவண வைரீ இராமப்பன்
பலராம பரசு ராமப்பன்

குருவாயூரப்பன் ஸ்ரீ குருவாயூரப்பன்

பட்டத்ரீ பரவும் நாராயணப்பன்
பாற்கடல் உறையும் பரந்தாமப்பன்
வைகுண்டவாச கோவிந்தப்பன்,  (நம்)
கலி தீர்க்கப் போகும் கல்கியப்பன்

குருவாயூரப்பன் ஸ்ரீ குருவாயூரப்பன்

சிவம் சுபம்

சிவ-சக்தி நிரந்தரமாய் வாழும் மா மதுரை மீனாக்ஷி சுந்தரேசரின் பள்ளியறை பூஜை வைபவம்






நேற்று இரவு அன்னை மற்றும் சுந்தரேசப் பெருமானின் அர்த்த ஜாம, மற்றும் பள்ளியறை பூஜை/ஊஞ்சல் வைபவங்களை (மீண்டும் ஒரு முறை) கண்டு களிக்கும் வாய்ப்பு பெற்றேன்.

அன்னையின் அர்த்த ஜாம அபிஷேகத்திற்குப் பின் அன்னை வெண்  (சில நேரங்களில் pale yellow) பட்டுப் படவையில் காட்சி தருகிறார்.  

மூலத்தானத்தில் அன்னையை பாதாதி கேசம் மல்லிகைகப் பூவால் மட்டுமே அலங்கரிக்கப்பட்டு ஒரு மஹா தீபாராதனை செய்கிறார்கள். இந்த நேரத்தில் அன்னையின் தோத்திரங்களை, பாடல்களை நாம் அனைவருடன் இணைந்து இசைக்கலாம்.
தீபாராதனையுடன் அன்னையின் மூலத்தானம் மூடப்பட்டு,  பள்ளியறை திறக்கப்பட்டு அங்கு மல்லிகை சூடி அமர்ந்த அன்னையைத் தெரிசிக்கலாம்.

அதே நேரத்தில்,
இறைவனும் தனது அ-ஜாம பூஜைக்குப்பின் அன்னையிடத்திறகு மேள தாளத்தோடு வருகிறார். அன்னை சன்னிதி தலைவாயிலில், அய்யனின் புனிதத் திருவடியானது பூஜை செய்விக்கப் பட்டு, முழுதும்  மல்லிகை சூழப்பட்டு ஒரு சீலரால் தாங்கப் பட்டு பள்ளியறைக்குள் செல்கிறது.  தொடரந்து அய்யனை "ராஜாதி ராஜ ராஜ கம்பீர ராஜ குல ரக்ஷக ......... சௌந்திர பாண்டிய சொக்கநாத சுந்தரேசப் பெருமான்  வருகிறார்" என்று கட்டியம் கூறி மிகுந்த பணிவுடன், குங்குலிய சேவையுடன், அய்யனை பள்ளியறை ஊஞ்சலில் எழுந்தருளச் செய்கிறார்கள். 

கூடியிருக்கும் அனைவரும் மாணிக்க வாசகப் பெருமானின் "திருப் பொன்னூஞ்சல்" ஒரே குரலில் இசைக்கிறார்கள்.  பின் விரிவான தீபாரதனை வைபவம்.  அம்மையப்பன் ஊஞ்சலாடுவதை எதிரில் இருக்கும் நிலை கண்ணாடியில் அவர்களே பார்த்து மகிழ்கிறார்கள்.  அதை நாமும் கண்டு நெகிழலாம். பின் நாதசுர இன்னிசையுடன் பால் கல்கண்டு மற்ற ப்ரசாதங்கள் நைவேத்யம் செய்விக்கப் பட்டு அம்மையப்பன் ஏகாந்தமாக விடப் பட்டு நடை சாத்தப் படுகிறது.

அனைவருக்கும், மலர், சந்தனம், பால், சுண்டல்/சாத ப்ரசாதங்கள் விநியோகம் செய்யப் பட்டு  இறையருளோடு இல்லம் திரும்பும் மனநிறைவை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

மதுரையே சிவராஜ தானி.
மதுரையே கௌரீ லோகம்.
மதுரையே பூலோக ஸ்வர்க்கம்.

நம்முள் இருப்பது மீனாக்ஷியே.
நற்றுணையாவது
சுந்தரேசரே.

சிவம் சுபம்




மதுரை அ-ஜாம பள்ளியறை சேவை

ஓம்

மதுரை அ-ஜாம பள்ளியறை சேவை

வெண் பட்டுக்கு பெருமை சேர்த்தாள், வெண் முல்லை மல்லிகைக்கு நறு மணம் சேர்த்தாள், சகலா கலா வல்லி ஞான சக்தி சட்டென பள்ளியறை ஊஞ்சல் அமர்ந்தாள்
கட்டியம் ஒலிக்க
சௌந்திர பாண்டியன் வந்தான். சௌந்திர நாயகியுடன்   ஊஞ்சலில் அமர்ந்தான்,  அன்பர்கள் :பொன்னூஞ்சல்" இசைக்க அம்மையும் அப்பனும்
ஆடி மகிழ்ந்தாரே.

ஆட்டுவிப்பாருக்கே "பொன்னூஞ்சல்"  ஆட்டுவித்த மணிவாசகர் பெருமை சொல்லவும் அரிதே.

சிவம் சுபம்

அகத்தியர் அருளிய பாடல்

ஓம்

அகத்தியர் அருளிய  பாடல்

செந்தூர் கடற்கரையில் நந்தா விளக்கில் உயர்
சிந்தாமணிக்கு நிகரானவன்

கந்தா குஹா கௌரி மைந்தா எனக் கனிந்து
வந்தார் என் மனக் குறை தீர்ப்பவர்

அன்பிற் பிறந்து வளர் அன்பிற் சிறந்து உயர்
அன்பர்க்கெல்லாம் அன்பு மூர்த்தியாம்
அற்பர்க்கெல்லாம்  அசுர துஷ்டர்க் கெல்லாம் அவர்
அச்சப்படும் கால மூர்த்தியாம்

நம்பிப் பணிந்தவர் முன் பிம்பத் தனி மயிலில்
செம்பொற்ச் சிலம்பொலிக்கத் தோன்றுவான்
நம் சிந்தைக் கிசைந்து விளையாடுவான்
பொங்கும் தனிக் கருணைத் தங்கத் தனம்
சகல சம்பத்தையும் தந்து வாழ்த்துவான்

சிவம் சுபம்

SANGEETHA SEVA at Sri Aarumuga Naayanaar Temple within Sri Nellaiyappar Temple



 SANGEETHA SEVA at
Sri Aarumuga Naayanaar Temple within Sri Nellaiyappar Temple.  In all other temples including Tiruchendur one will find Pancha-loga Aarumugamurthy.  Only in Nellai(yappar Temple) u will find Aarumugar in Silaa roopam, chiselled to perfection with Swami sitting over a Peacock.
A rare divine vision indeed.  Sivam Subam

Audio

(பிறவித்) தொல்லை யெலாம் தீர்க்கும் நெல்லை யப்பனே நம் அம்மையப்பன்



சாமா

(பிறவித்)   தொல்லை யெலாம் தீர்க்கும் நெல்லை யப்பனே நம் அம்மையப்பன்

சாம கான விநோதன் ஞானக் காந்திமதித் தாயின் ஒரு பாகன்

பரணிக்கரை வாழ் பரம தயாளன்,
தாமிர சபை ஆடும் தங்க மனத்தான், சொல்வேலியுள் அடங்கா (திரு) நெல்வேலி நாதன், அருள்வேலியிட்டு நம்மைப் பேணும் (ஞானப்) பிச்சாடணன்

சிவம் சுபம்

Prayer to Sri Mahaperiyavaa in Tamil

Raa Raa Simha Mugaesaa

OM

Mohanam

Raa Raa Simha Mugaesaa
Raa Raa rakshitha Bhuvanesaa

Raa Raa Prahlaatha Varadhaa
Raa Raa naa PraaNa Naadhaa

Raa Raa Chakra nivaasaa
Raa Raa Sathru samhaaraa
Raa Raa Sanchala Nivaaraanaa
Raa Raa Sankata Naasanaa

Raa Raa Oorkaadu vaasaa
Yeera nee Divya Darsanam
Raa Raa Sri Lakshmi Samethaa
Yeeraa nee krupaa kataaksham

Raa Raa Vajra dhamshtraa
Yeeraa Vajara Daegam
Raa Raa BharaNi thatesaa
Yeera thida  Bhakthi vairaagyam

Raa Raa Manthra Raajaa
Yeera Dvaitha-advaitha abetham
Raa Raa Abaya Hasthaa
Yeeraa nee Paatha Padmam

Sivam Subam

ஞாயிறும் திங்களும் உன் கண்கள்



ஞாயிறும் திங்களும் உன் கண்கள்
செவ்வாய் மலர்ந்தால் நால் வேதம்.
புதன் தொழுதிடும் அற்புத சொக்கா,
அக்கினியே உன் மூன்றாம் கண்

ஆலடி அமர்ந்த குருநாதா,
சுக்கிரனுக் கண் ஈந்தவனே,
சனி தொழும் தர்பாரண்யனே, இரு அரைப் பாம்புகள் தொழும் நாக பூஷணா

இருபத்து ஏழும் பணி செய்யும்
மூல முதல் மறைப் பொருளே,
அந்த கரணங்களையெல்லாம்
சுபமாக்கி அருள் பொழிந்திடுவாய்
பந்த பாசம் அறுத்திடுவாய், ப்ரதோஷ தாண்டவம் காட்டிடுவாய்.

ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.

சிவம் சுபம்

கண்ணுக்குள் நிற்கும் கனவானே



கண்ணுக்குள் நிற்கும் கனவானே
என் கருத்தினுள் நிலைத்திடுவாயே, என்

கற்பக வ்ருக்ஷமாம் என் அன்னையை,  மடிவைத்த பெருமாளே, உன் பொற்பத மலரை என் சிரம் தாங்கும் நாளும் என்னாளோ

மச்ச கூர்ம வராஹத்திற்கு பெருமை சேர்த்த பெரியவா, உன் பச்சைமா மலை போல் மேனிக்கு சிங்கத்தை சிகரமாய் கொண்பாயே

தாய்மடி புகுந்தால் தாமதம் -
ஆகும் என்றே இருந்த தூணையெல்லாம் - தாயாக்கிய சேயே, (ஆதி)சேஷன் மேல் அமர்ந்த ச்ரேஷ்டனே, ஊர்காடு வாழும் பரணீதரனே

கானகம் வாழும் தேவனே
பானகம் அருந்தும் பரமனே,  என்
சேவகம் நீ ஏற்க வேண்டுமே,
தாமதம் அறியா தெய்வமே

சிவம் சுபம்

நந்தி தாங்கும் நாயகனே



நந்தி தாங்கும் நாயகனே
எங்கள் நந்தவன
தாயகனே
நமசிவாயனே
நல்லருள் புரிவானே

அறுகு வில்வம் சூடிடுவான்
மன யிருளதை நீக்கிடுவான்
அருள் மழை பொழிந்திடுவான்.
அடி மலர் தந்தருள்வான்.

நந்திமேல் வலம் வருவான்.
நம் அன்னையும்
உடன் வருவாள்.
தாண்டவம் ஆடி நம்மை தன்னுள் இணைத்துக்
கொள்வான்.

சிவம் சுபம்

ஸ்வாகதம் அத்தி வரதா



ஸ்வாகதம்  அத்தி வரதா
ஸுஸ்வாகதம் காஞ்சி வரதா

நாற்பது வருடம் காத்திருந்தோம்
உன் திருவடிப் புகழ்ச்சி இசைத்திருந்தோம்
நாளும் உன்னை நினைத்திருந்தோம், உன் மலர் முகம் காண துதித்திருந்தோம்

அனலில் தோன்றிய அற்புதனே
அயனை ஈன்ற ஆனந்தனே
நீரில் மறைந்த நிர்மலனே
பாரோர் காண பரிந்தே வா

சங்கு சக்கரம் ஏந்தி வா
சங்கடம் போக்க விரைந்தே வா
மனதில் மாதை வைத்தவனே வா
மங்கலம் பொழி வா மாதவனே வா

(பழைய) சீவரத்தானை முன் வைத்து
திருக்குள சயனம் கொண்டவனே
இக் காசினியோர் உளம் நெகிழ்ந்திடவே (ஒரு)
மண்டலம் எம்மிடை வாழ் வா வா

இராமானுஜர் கண்ட ராகவனே
ஆண்டாள் மனமுறை அரங்கனே
ஆழ்வார் துதி கொண்ட ப்ரபந்தனே,
அருள் மழை பொழிந்து காத்திட வா

வரதா வரதா காஞ்சி வரதா
வரம் தா வரம் தா அத்தி வரதா
பத்தி செய்தோம் அத்தி வரதா
நல் முத்தியும் யருள விரைந்தே வா

சிவம் சுபம்