Sunday, March 26, 2017

மூலத்தில் உதித்த முத்து (Saraswathi)

ஸரஸ்வதி

மூலத்தில் உதித்த முத்து,  ஆதி மூலமாம் அண்ணலைக் கவர்ந்த சித்து (சொத்து)

அஞ்சனையின் அருந் தவமாருதி,   அன்னை சீதையின் அருள் பெற்ற வாரிதி

தாசரதி குலம் காத்த தபோநிதி
மாசற்ற மனமுறை தயாநிதி
ராம காவிய சுந்தரன், (ராம) நாம ஜெப ப்ரிய பாகவதன்

பர(ம) சிவனார் அளித்த ஆஞ்சனேயம்,
பரமனை உள் வைத்த ஆலயம்,
பக்தனாய் தோன்றி பகவன் ஆன அற்புதம்,  ஜீவன்
முக்தராய் நம்மை வாழ வைக்கும்
அமுதம், அருளமுதம்

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

பெற்ற தாய் தந்தையரைப் பேணாது (Naadanamakriya)

நாதநாமக்ரிய

(பெற்ற) தாய் தந்தையரைப் பேணாது
தாயுமானவனைத் தொழுது பயன் என்ன?

ஈன்றவரைத் தொழாது இராம நாம ஜெபம் அருள் தருமா ?

(தன்) உதிரத்தால் நம் உயிர் வளர்த்தாளை உதாசீனம் செய்யலாமா ?
(உருவாய்) இருந்த போது உணவிடாது
இறந்த பின் பிண்டம் பெரும் தண்டமே .

(நம்) கண் கண்ட தெய்வம் பெற்றோரே,
விண்ணவரும் இதை ஏற்பாரே,
பெற்றோரை வலம் வரும் பிள்ளைகளே,
பிள்ளையாரைப் போலே முழு முதலாவாரே

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

சுபமெல்லாம் அருளும் சுந்தர காண்டம்

விருத்தம்

காற்றின் மகவானான், வானளாவிப் பறந்தான்,
அகன்ற கடல் கடந்தான், புவி மகள் உயிர் காத்தான்,
அதர்மத்தை எரித்தான், கண்டேன் அன்னையை என்று அண்ணல் அடி பணிந்தவன் பதம் பணிந்து உய்வோம்

சுபமெல்லாம் அருளும் சுந்தர காண்டம்,
சொல்லின் செல்வனின் திறல் விளங்கு காண்டம்

ஜெகம் புகழும் புண்ணியனின் வீர தீர காண்டம்,
ஜெகன்மாதா சீதை மனம் மகிழ்ந்த காண்டம்

ராம பக்த மாருதியின் மகிமை நிறை காண்டம்,
ராமனே நெகிழ்ந்து நின்ற ரசமிகு காண்டம்,
படிப்பவர் கேட்பவர் பதினாறும் பெற்று,
நிறை வாழ்வு வாழ அருளும் காண்டம்

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

ஒருவனே இறைவன், அவனே நம் தலைவன் (Sudda Dhanyasi)

சுத்த தன்யாசி

ஒருவனே இறைவன், அவனே நம் தலைவன்

ஹரி என்பார் ஹரன் என்பார் அவனை, இரண்டுமே நான் என்பான் அவனே

வடகோடியில் சிவனாய் "ராம" ஜெபம் செய்வான், தென் கோடியில் ராமனாய் சிவாலயம் சமைப்பான், விழி கொடுத்து மாலாய் சிவனை துதிப்பான், சக்கரம் ஈந்து சிவனாய் மாலைக் காப்பான்

விஷ்ணு துர்க்கையாய் நம் அன்னை  யாவான், சிவ பரனாய் அவனே நம் தந்தையும் ஆவான்,
ஒரு தேவனே பல உருவில் தோன்றி அருள்வான்,  இதை உணர்ந்தோரின் உள்ளத்திலே ஜோதியாய் ஒளிர்வான்

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

அபிராம புரத்தானே (Brindavana Saarangana)

பி/சாரங்கா

அபிராம புரத்தானே
ஆதித்யன் சீடனே
இராம தாரகனே
ஈஸ்வராம்சனே

உன்னத வானரனே
ஊழை வென்றவனே
என்றும் வாழ்பவனே
ஏற்றமிகு நைஷ்டீகனே

ஐந்து முகத்தோனே
ஒப்பிலா சொல்லோனே
ஓங்கார மாருதியே
ஔஷத சஞ்சீவியே

அடிமலர் சரணே!

சிவம் சுபம்

நெஞ்சே நினைத்துருகு நட மாடும் தெய்வமதை,

உ

நெஞ்சே நினைத்துருகு நட மாடும் தெய்வமதை,
செவியே கேட்டொழுகு அத் தெய்வத்தின் குரலதனை.

கண்ணே கண்டுருகு காம கோடீ சங்கரரை,
நாவே செபித்துருகு ஜெய ஜெய சங்கர என்றவரை.

நுதலே பூண்டொளிரு அய்யன் திரு நீற்றதனை,
மூக்கே நீ முகரு அய்யன்
பாத மலர் தனையே.

காலே வலம் வந்து பணி
அய்யன் அதிஷ்டானமதை,
வாயே குடித்துய்வாய்
அய்யன் தீர்த்த ப்ரசாதமதை.

கரமே குவித்து தொழு
சந்திர சேகர ஸரஸ்வதியை,
சிரமே சூடி ஒளிர் அவர்
திரு பாதுகைகள் தனையே

பரம சிவனாராம் நம்
பரமாச்சார் யரிடம்
சரணம் அடைந்திடுவோம்
மரணம் வென்று வாழ்வோம்

சிவம் சுபம்

ஸரஸ்வதி மாதா, உன் சரணகமலம் தா (Saraswathi)

ஸரஸ்வதி

ஸரஸ்வதி மாதா, உன் சரணகமலம் தா

வெண் தாமரை வளர் வேதக் கருவே, வீணை மீட்டும் நாத உருவே

கூத்தனூர் வாழும் கோமளமே,  கம்பனுக் கருளிய கலைத் தெய்வமே, நாரதனை ஈன்ற நா மகளே,
(எனக்கும்) நல் கலை ஞானம் அருள்வையே

எண்ணும் எழுத்தும் ஆனவளே, பண்ணும் பரதமுமாய் ஒளிர்பவளே,
மண்ணும் விண்ணும் தொழும் தேவி, கண்ணும் கருத்துமாய் (எனைக்) காப்பவளே

சிவம் சுபம்