Thursday, November 3, 2016

Narasimhar Song ( சக்கரத்திலே அமர்ந்து சகலத்தையும்  கணிக்கும் திருமாலே - Revathi)

விருத்தம்**

நரசிங்கா என்றால் நரரும் தேவராவார்
நரசிங்கா என்றால் நம் வினைகள் அனைத்தும்  ஓடும்
நரசிங்கா என்றால் நமக்கேது பயம்
நரசிங்கா என்றால் நமக்கெல்லாம் இனி ஜெயமே...
இது சத்தியம் தானே

பாடல் - ரேவதி

(சுதர்சன) சக்கரத்திலே அமர்ந்து சகலத்தையும்
கணிக்கும் திருமாலே - நரசிங்கா,  நாரணா,
நான்மறை போற்றும்...... (சுதர்சன)

திண்ணமாய் உனை நினைந்தவர் வாழ்வினில்
திருமகளும், கலைமகளும், மலைமகளும்
அருள் மழை பொழிவாரே

அன்னை கோசலை தன் மாதவப் பயனே - ஒரு
சிறு விரலால் கிரியேந்திய மாயவனே
கொடிய வினை களையும் கோமானே
கோதை மனம் உறை ஸ்ரீ ரங்க நாதனே

திருமலை வாழும் கலியுக  வரதனே
திருமோகூர் உறையும் காளமேகனே
(உன்னை) இரு கரம் கூப்பித்  தொழுவோர்க்கு
ஈரெட்டு கரம் கொண்டு அருளும் கனவானே

** (விருத்தம் - ஸ்ரீ ஹரிதாஸ் ஸ்வாமிகள் அவர்கள்
ஒருமுறை பாடக் கேட்டது)

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

audio

ஸர்வ தேவ ஸ்துதி - ராகமாலிகை

ஆனைமுகனே! ஆறுமுகனே!
அம்மையே அப்பனே! அருள்வீரே
அன்புடனே

கார்முகில் வண்ணனே! கமலத் திருமாதே! நான்முகனே! நா மகளே! நலமெல்லாம் தருவீரே

ஹரி ஹர ஸுதனே! ஐயனே ஸரணம்.
அரி ராம சேவகனே அனுமனே ஸரணம், நவ க்ரஹ நாயகரே ஸரணம் ஸரணம், நம்பித் தொழுதோமே நன்மையே செய்வீரே

சங்கர குருவே! சந்திர சேகரரே,
ஸ்ரீ ராகவேந்திரரே, ஷீரடி சாயியே (ஸ்ரீ சத்ய ஸாயியே), சங்கீத மூர்த்திகளே!
ஸாது ஜனங்களே, ஸகல சௌபாக்ய கலை ஞானம் அருள்வீரே

மாதா பிதா குரு தெய்வமே ஸரணம், மலரடி தொழுதோமே, மனகிழ்ந் தருள்வீரே.

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்


audio


"நவகோள் பணி நம் பரமாச்சார்ய மூர்த்தி"

சடை மறைத்து மறை முடி வைத்து
புலியாடை  களைந்து, காவி பூண்டு
சூலம் விடுத்து தண்டம் ஏந்தி,
கயிலை விட்டு காஞ்சி வந்து,
பாதம் பதித்து இப்புவியை புனிதமாக்கி,
ஆலடியில் அன்று சொல்லாமல் சொன்னதை,
காமகோடி அமர்ந்து (தன்) தெய்வக் குரலால்
உலகுக்குரைத்த  நம் பரமாச்சார்யராம்
பரசிவனாரின் பாதுகைப் பூவே
நம் பாதுகாப்பு.

"சூரியனே" மங்கும் முக ஒளி,
"சந்திரனை" மிஞ்சும் குளிர் மனம்,

"செவ்வாய்" மலர்ந்தால் ஆறாம் வேதம்
அற்"புத" காமகோடி அருள் ப்ரவாகம்,

பரம "குரு" சந்த்ர சேகர மூர்த்தி,
"வெள்ளி" மலையாடும்  நாதனின் கீர்த்தி,
"ஸ்திர" பக்தி செய்வோர்க்கு ஞான ஸரஸ்வதி, அவர்
பதம் பணிந்தோர்க் கென்றும் பணிவிடை செய்யும்
அவ்"விரு அரைப் பாம்பு"ம்.

ஜெய ஜெய சங்கர ஹர ஹர   சங்கர
ஹர ஹர சங்கர ஜெய சந்த்ர சேகர

சிவம் சுபம்

audio